அமிதாப் – ரேகா காதல் உண்மையா? சிமி கரேவால் ஷோவில் பிக்பி உடைத்த மௌனம்!

பாலிவுட்டின் எக்காலத்திற்கும் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்று அமிதாப் பச்சன் மற்றும் ரேகா இடையிலான உறவு. பல தசாப்தங்களாக கிசுகிசுக்கப்படும் இந்த விவகாரம் குறித்து ரேகா அவ்வப்போது சூசகமாக பேசினாலும், அமிதாப் எப்போதும் மௌனம் காப்பதே வழக்கம். ஆனால், சிமி கரேவாலின் புகழ்பெற்ற டாக் ஷோவில், இந்த ‘சர்ச்சை’ குறித்து அமிதாப் முதன்முதலாக மனம் திறந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமிதாப்பின் ABCL நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து, அவரது படங்கள் தோல்வியடைந்து கொண்டிருந்த ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இந்த நேர்காணல் நடந்தது. அந்த நேரத்தில் அவருடன் ஜெயா பச்சனும் பங்கேற்றிருந்தார். ரேகாவுடனான காதல் குறித்து சிமி நேரடியாகக் கேட்டபோது, அமிதாப் மிகவும் நிதானமாகவும் கறாராகவும் பதிலளித்தார்.
அனைத்து வதந்திகளையும் திட்டவட்டமாக மறுத்த அவர், “ரேகா எனது சக ஊழியர் மற்றும் உடன் நடிக்கும் கலைஞர் மட்டுமே. படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திப்பது இயல்பானது, ஆனால் சமூக ரீதியாக எங்களுக்குள் எந்தப் பொதுவான விஷயமும் இல்லை. அவ்வளவுதான்,” என்று கூறினார்.
விருது வழங்கும் விழாக்களைத் தவிர தங்களுக்குள் எந்தச் சந்திப்பும் நிகழ்வதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 1981-ல் வெளியான ‘சில்சிலா’ திரைப்படத்தின் கதை இவர்களின் நிஜ வாழ்க்கையை ஒத்திருப்பதாகக் கருதப்பட்டது. அமிதாப் இதை வெறும் தொழில்முறை உறவு என்று கூறினாலும், இன்றும் ரசிகர்களுக்கு ரேகா-அமிதாப் இடையிலான உறவு ஒரு புதிராகவே நீடிக்கிறது.