அசாம் மக்கள்த்தொகை மாற்றம்: முஸ்லிம் மாவட்டங்களில் மட்டும் வாக்காளர்கள் அதிகரிப்பது ஏன்?

அசாம் மக்கள்த்தொகை மாற்றம்: முஸ்லிம் மாவட்டங்களில் மட்டும் வாக்காளர்கள் அதிகரிப்பது ஏன்?

அசாமில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல், மாநிலத்தின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாநிலத்திலுள்ள 35 மாவட்டங்களில் வெறும் 10 மாவட்டங்களில் மட்டுமே வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், அந்த 10-ல் 8 மாவட்டங்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்.

அதிரடி மாற்றமும் புதிய புள்ளிவிவரங்களும்

பார்பெட்டா, துப்ரி, கோல்பாரா, மோரிகான், நகான் மற்றும் தெற்கு சல்மாரா போன்ற மாவட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பார்பெட்டா மாவட்டத்தில் மட்டும் 28,625 புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர், இது மாநிலத்திலேயே அதிகபட்சமாகும்.

மறுபுறம், அசாமிய கலாச்சாரத்தின் கோட்டையாகக் கருதப்படும் மேல் அசாம் பகுதிகளான ஜோர்ஹாட், லக்கிம்பூர் மற்றும் கோலகாட் ஆகிய மாவட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் எச்சரிக்கை

இந்த மக்கள்த்தொகை மாற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “வரும் 2041-ம் ஆண்டிற்குள் அசாம் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறக்கூடும்” என்று எச்சரித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் முஸ்லிம் மக்கள்த்தொகை சுமார் 40 சதவீதத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீக்கப்பட்ட பெயர்களும் அரசியல் மோதலும்

இந்த புதிய பட்டியலிலிருந்து சுமார் 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும், ‘வாக்குகளை திருடுவதற்கும்’ செய்யப்படும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், சட்டவிரோத வங்கதேச குடியேறிகளுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமான புகார்களை அளித்திருந்ததாக முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

‘மியா’ (வங்கமொழி பேசும் முஸ்லிம்கள்) சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் வாக்காளர் எண்ணிக்கை, அசாம் அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *