ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம் இனி கடைசி நேரத்தில் கேன்சல் செய்தால் பணம் கிடைக்காது

ரயில் பயணிகளின் வசதிக்காகவும் காலியாக உள்ள இருக்கைகளை முறையாகப் பயன்படுத்தவும் டிக்கெட் ரத்து விதிகளில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், பயணிகளுக்கு எவ்வித ரீஃபண்ட் தொகையும் வழங்கப்படாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இந்த கால வரம்பு 4 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் குறைந்தபட்ச கட்டணத்துடன் முழுத்தொகையும் திரும்பப் பெறலாம். ஆனால் 24 முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் கழிக்கப்படும். இந்த புதிய நடைமுறை ஏற்கனவே வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் அமலில் உள்ளது. விரைவில் அனைத்து ரயில்களிலும் இது நடைமுறைக்கு வரும் என்பதால், பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.