மேற்காசியப் பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு வாரங்களில் தாயகம் திரும்பிய 2 லட்சம் இந்தியர்கள்

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2.20 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையிலான மோதலால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை சற்று சீராகியுள்ளது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 16 வரையிலான காலகட்டத்தில் இந்த மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள சுமார் 9,000 இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களை மீட்பதற்கான முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் உதவியுடன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது. மாணவர்கள் விரும்பினால் மாற்றுப் பாதைகள் மூலமாகவும் தாயகம் திரும்பத் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.