மிரட்டலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகும் திருமாவளவன் கடும் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை என்டிஏ கூட்டணியில் இணைக்க பாஜக அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐ விசாரணை மற்றும் திரைப்பட வெளியீட்டுச் சிக்கல்கள் மூலம் விஜய்க்கு நெருக்கடி தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அது அவருடைய அரசியல் வாழ்வையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். விஜய் அத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டார் என்றும், தனது எதிர்காலத்தைச் சிதைத்துக் கொள்ளும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் தான் நம்புவதாகத் திருமாவளவன் செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.