மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த மே 31 வரை தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தவறும் பட்சத்தில், விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வீதம் டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்கப்படும் என்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது 29 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் இதனை விரைந்து செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதுபாட்டில்களில் கியூ.ஆர். கோடு பொருத்துவதன் மூலம் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. காலி பாட்டில்களை முறையாகக் கையாள டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.