“நீ தனியாக இல்லை சகோதரா!” – சிறை செல்லும் ராஜ்பால் யாதவுக்கு கைகொடுத்த ‘மசிஹா’ சோனு சூட்!

செக் மோசடி வழக்கில் 9 கோடி ரூபாய் கடனில் சிக்கி, கண்ணீருடன் திகார் சிறைக்குச் சென்ற நடிகர் ராஜ்பால் யாதவின் நிலை ஒட்டுமொத்த திரையுலகையும் அதிரவைத்தது. “எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை” என அவர் உருக்கமாகத் தெரிவித்த நிலையில், பாலிவுட்டின் ‘ரியல் ஹீரோ’ சோனு சூட் அவருக்கு ஆதரவாக முன்வந்துள்ளார்.
ராஜ்பால் யாதவின் திறமையை பாராட்டிய சோனு சூட், தனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கியதோடு, அதற்கான ‘சைனிங் அமௌன்ட்’ தொகையையும் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோனு சூட், “நேரம் சில சமயம் கடினமாக இருக்கலாம், ஆனால் திறமை என்றும் குறைந்துவிடாது. ராஜ்பால் யாதவ் எனது அடுத்த படத்தில் நிச்சயம் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்த அவர், “நம்மில் ஒருவர் கஷ்டப்படும்போது, ‘நீ தனியாக இல்லை’ என்று சொல்வது நமது கடமை. அப்போதுதான் நாம் ஒரு குடும்பமாக இருக்கிறோம் என்பது உறுதியாகும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த ராஜ்பால் யாதவுக்கு, சோனு சூட்டின் இந்த உதவி ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.