டெல்லியை விட்டு எப்போது விலகும் எரிமலைச் சாம்பல்? IMD-ன் முக்கிய தகவல்

நீண்ட நாட்களாக செயலற்று இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அதன் சாம்பல் மேகம் திங்கள்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் டெல்லியை வந்தடைந்தது. வானிலை ஆய்வு முகமைகளின் முன்னறிவிப்பு மாதிரிப்படி, குஜராத், ராஜஸ்தான், டெல்லி-என்சிஆர், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா முழுவதும் இந்த சாம்பலின் தாக்கம் இருக்கக்கூடும். இந்த சாம்பல் மேகம் இந்தியாவின் மீது மணிக்கு 100-120 கி.மீ வேகத்தில் 15,000 முதல் 25,000 அடி உயரத்தில் நகர்கிறது, இதில் சாம்பல், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண் பாறைகள் உள்ளன.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா, எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் இருந்து வந்த இந்த மாபெரும் சாம்பல் மேகம் செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குள் இந்தியாவை விட்டு சீனா நோக்கி நகர்ந்துவிடும் என்று தெரிவித்தார். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) ஆலோசனையைத் தொடர்ந்து, ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்கள் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட ஜெட்டா, குவைத் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.