சிந்துவின் ஒலிம்பிக் கனவை தகர்த்த கரோலினா மரின் திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

மூன்று முறை உலக சாம்பியனும் முன்னாள் ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளருமான ஸ்பெயினின் கரோலினா மரின் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2016 ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்ற 32 வயதான மரின், தொடர்ச்சியான முழங்கால் காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். தனது சொந்த ஊரில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் விடைபெற்றுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் காயம் காரணமாக வெளியேறிய போதே மனதளவில் ஓய்வு பெற்றுவிட்டதாக மரின் உருக்கமாக தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் ஆசியர் அல்லாத வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் இவர். 2014, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டங்களை வென்ற மரினின் இந்த முடிவு விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.