சாதாரண சண்டை கோரமான முடிவு! கணவரைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த மனைவி, தீவிர தேடுதல் வேட்டை

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்ச்பூர் கிராமத்தில், ஒரு பெண் தனது 43 வயது கணவர் சந்தோஷ் பகத்தை ஒரு சிறிய குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட மனைவி சுத்தியலால் கணவரைத் தாக்கி கொன்றபின், சடலத்தை ஒரு போர்வையில் சுற்றி, டிராலி-சூட்கேஸில் அடைத்துள்ளார். இந்த பயங்கரமான கொலை வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சூட்கேஸுக்குள் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மனைவி வீட்டை விட்டு உடனடியாக தப்பி ஓடிவிட்டார். அவரே தனது மகளுக்கு தொலைபேசியில் கொலை மற்றும் உடலை சூட்கேஸில் வைத்தது குறித்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் பணிபுரிந்து அடிக்கடி கிராமத்திற்கு வந்து சென்ற அந்தப் பெண்ணைக் கைது செய்ய, போலீசார் மகாராஷ்டிராவுக்கு ஒரு குழுவை அனுப்பி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.