குழந்தைகளிடம் பொய் சொல்லும் பழக்கமா? மாற்ற உதவும் எளிய வழிகள்!

குழந்தைகள் மழலை மாறாமல் பேசும் பொய்கள் ஆரம்பத்தில் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், வளர வளர இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அது பெற்றோர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக 2 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த வயதில் அவர்கள் கதைகளை உருவாக்கிச் சொல்வது அவர்களின் மொழித்திறன் மற்றும் கற்பனைத் திறன் வளர்வதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தப் பழக்கம் ஒரு தீய பழக்கமாக மாறாமல் தடுக்க பெற்றோர் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
வயதுக்கேற்ற மாற்றத்தைக் கவனியுங்கள்
சிறு வயதில் குழந்தைகள் சொல்லும் பொய்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலைச் சமாளிக்கவோ அல்லது விளையாட்டாகவோ இருக்கும். ஆனால், வளர வளர ஒரு குழந்தை திட்டமிட்டு அல்லது ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொய் சொன்னால், அது எச்சரிக்கை மணி. வயதிற்கு ஏற்ப இந்தப் பழக்கம் குறைகிறதா அல்லது கூடுகிறதா என்பதைக் கண்காணித்து, அதற்கேற்ப செயல்படுவது அவசியம்.
அடிப்பதோ திட்டுவதோ தீர்வாகாது
குழந்தை பொய் சொல்கிறது என்று தெரிந்தவுடன் ஆத்திரத்தில் கத்துவதோ அல்லது கை நீட்டி அடிப்பதோ அந்தப் பழக்கத்தை இன்னும் மோசமாக்கும். தண்டனைக்கு பயந்தே குழந்தைகள் தங்களைக் காத்துக் கொள்ள அதிக பொய்களைச் சொல்லத் தொடங்குவார்கள். எனவே, அமைதியான முறையில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பொய் சொல்வதால் மற்றவர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படி இழப்பார்கள் என்பதை விளக்கிக் கூறவும்.
அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம்
மூன்று வயதுக் குழந்தை ஏதோ கற்பனையாகச் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், 5 முதல் 6 வயதுடைய ஒரு குழந்தை தொடர்ந்து பொய் சொன்னால் அதைச் சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். ‘குழந்தை தானே’ என்று நீங்கள் கொடுக்கும் அதிகப்படியான சலுகை, எதிர்காலத்தில் அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும். எனவே, அன்புடன் கூடிய கண்டிப்பு எப்போதுமே தேவை.
நேர்மையைப் பாராட்டுங்கள்
குழந்தை எப்போதாவது தவறு செய்துவிட்டு, அதை உண்மையாக ஒத்துக்கொண்டால், முதலில் அவர்களின் நேர்மையைப் பாராட்டுங்கள். தவறுக்காகத் தண்டிப்பதை விட, உண்மையைச் சொன்னதற்காக அவர்களை உற்சாகப்படுத்தினால், அடுத்த முறை பொய் சொல்லத் தயங்குவார்கள்.