காதலித்துவிட்டு சாதி பெயரால் திருமணம் மறுத்தால் ஆயுள் தண்டனை, கர்நாடக அரசின் அதிரடி சட்டம்

கர்நாடகாவில் ஆணவக் கொலைகளைத் தடுக்க ‘இவர் நம்மவர்-2026’ எனும் புதிய சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி உறவு வைத்துவிட்டு, பின்னர் சாதியக் காரணங்களைச் சொல்லி மறுத்தால் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும். குடும்ப அழுத்தம் அல்லது சாதிப் பெயரால் பின்வாங்கும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரசியலமைப்பு உரிமைகளை நிலைநாட்டவும் முதல்வர் சித்தராமையா இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், மாநிலத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆணவக் கொலைகள் மற்றும் ஏமாற்று வேலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.