கண்ணில் திடீரென தோன்றும் சிவப்பு புள்ளிகள் ஆபத்தானதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கண்ணின் வெள்ளைப்பகுதியில் திடீரென ஏற்படும் சிவப்பு புள்ளிகள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மருத்துவ ரீதியாக இது சப்கான்ஜுன்க்டிவல் ஹெமரேஜ் என்று அழைக்கப்படுகிறது. இது கண்ணின் மெல்லிய திசுக்களுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுகிறது. கடுமையான இருமல், தும்மல், கண்களை தேய்ப்பது அல்லது ரத்த அழுத்தம் காரணமாக இது போன்ற சிவந்த புள்ளிகள் உருவாகலாம்.
பொதுவாக இந்த பாதிப்பு ஒரு சில வாரங்களில் தானாகவே மறைந்துவிடும் மற்றும் இது பார்வையை பாதிக்காது. இருப்பினும் சிவந்த நிறத்துடன் கடுமையான வலி அல்லது பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும். பெரும்பாலான நேரங்களில் பதற்றமடையத் தேவையில்லை என்றாலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதும் கண்களைத் தேய்ப்பதைத் தவிர்ப்பதும் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.