ஈரான் போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாத் துறை கடும் சரிவு
March 14, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக 2026 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 27% வரை குறையக்கூடும் என ‘டூரிஸம் எகனொமிக்ஸ்’ ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் சுமார் 3.8 கோடி பயணிகள் இப்பகுதியைத் தவிர்க்க வாய்ப்புள்ளதால், சுற்றுலாத் துறையில் 56 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த மோதல் சூழலால் விமான சேவை மற்றும் ஹோட்டல் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி பயணங்களை ஒத்திவைப்பதால் வேலைவாய்ப்புகளும் குறையக்கூடும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு நிலைமை சீராகாவிட்டால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.