இன்றைய முக்கிய செய்திகள்: பிஎஃப் பணம் இனி UPI மூலம்; டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் மோதல் உறுதி!
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
- சபாநாயகர் பதவிநீக்க தீர்மானம்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன. இது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும்.
- மேற்கு வங்க எஸ்ஐஆர் (SIR) வழக்கு: மேற்கு வங்கத்தில் நிலவும் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. மம்தா பானர்ஜி அரசு இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்புச் செய்திகள்:
1. UPI மூலம் பிஎஃப் பணம் – இபிஎஃப்ஓ (EPFO) அதிரடி!
இபிஎஃப்ஓ தனது 3.0 மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2026-க்குள் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் 8 கோடி சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் பணத்தின் ஒரு பகுதியை UPI வாயிலாக நேரடியாகப் பெற முடியும். 5 லட்சம் ரூபாய் வரையிலான க்ளைம்கள் இனி 3 நாட்களில் தானாகவே (Auto-settlement) தீர்வு செய்யப்படும்.
2. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம்: கசிந்த பிடிஎஃப், எப்ஐஆர் பதிவு!
முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதன் முன்பதிவு நகல் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக கசிந்ததால், டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் பணிந்தது, பிப்ரவரி 15-ல் இந்தியாவுடன் மோதல்!
டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யின் கடும் எச்சரிக்கையை அடுத்து பின்வாங்கியுள்ளது. திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான போட்டி நடைபெறும்.
4. ‘டான் 3’ சர்ச்சை: ரன்வீர் சிங்கிடம் ரூ. 40 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பு நிறுவனம்!
‘டான் 3’ படத்திலிருந்து திடீரென ரன்வீர் சிங் விலகியதால், தயாரிப்பு நிறுவனமான எக்செல் என்டர்டெயின்மென்ட் அவருக்கு ரூ. 40 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அந்த படத்தின் பணிகள் தற்போது முடங்கியுள்ளன.
5. 37 ஆண்டுகளில் முதல்முறை: ராணுவ கூட்டத்தை தவிர்த்த காமேனி!
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக விமானப்படை தளபதிகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.
இன்றைய புகைப்படம்:
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிதான் சரேய்காங் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சனிக்கிழமை இரவு தொடங்கிய மோதல், திங்கள்கிழமை பெரும் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.