இந்தியாவில் 5 நாட்களுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் இருப்பு சிஏஜி அறிக்கையால் பரபரப்பு

இந்தியாவின் மூலோபாய எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளதால், வெறும் ஐந்து நாட்களுக்கான இருப்பு மட்டுமே இருப்பதாக சிஏஜி தணிக்கை அறிக்கை எச்சரித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள கிடங்குகளின் மொத்த கொள்ளளவான 5.33 மில்லியன் மெட்ரிக் டன்னில், தற்போது 3.372 எம்எம்டி மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இறக்குமதியை 88% நம்பியிருக்கும் சூழலில், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு போதிய இருப்பு இருப்பதாகக் கூறினாலும், சர்வதேச எரிசக்தி முகமையின் 90 நாள் பரிந்துரையை விட இந்தியாவின் ஒட்டுமொத்த சேமிப்பு குறைவாகவே உள்ளது. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் நூறு நாட்களுக்கு மேலான இருப்பை வைத்துள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலை பலவீனமாக கருதப்படுகிறது. எதிர்கால எரிசக்தி நெருக்கடியைத் தவிர்க்க, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதுடன் மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கு விரைவாக மாற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.