இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசிடம் தற்போது அத்தகைய திட்டம் ஏதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் கண்காணித்து வரும் வேளையில், எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழுத் தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் பொறுப்பற்ற முறையில் வதந்திகளைப் பரப்புவது தேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியாவின் நிலைத்தன்மை உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசு ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். எனவே தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் அமைதி காக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.