அகமதாபாத் விமான விபத்தில் தப்பிய ஒரே பயணி, இன்னும் அதிர்ச்சியில் நம்பிக்கை

கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த கோரமான விமான விபத்தில் தப்பிப் பிழைத்த ஒரே பயணி, விஸ்வாஸ் குமார் ரமேஷ், இன்னும் அந்த கனவு நினைவுகளில் இருந்து மீளவில்லை. ’11A’ இருக்கையில் இருந்த விஸ்வாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதும், சுற்றிலும் எரிந்த உடல்களும், சிதைந்த பாகங்களும் அவரை இன்றும் அச்சுறுத்துகின்றன. விபத்து நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும், அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நள்ளிரவில் திடீரென விழித்துக்கொள்வதாகவும், யாரிடமும் அதிகம் பேசவில்லை என்றும் அவரது உறவினர் சன்னி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இதில் விஸ்வாஸ் தனது சகோதரரையும் இழந்தார். அந்த பயங்கரமான தருணங்கள் இன்றும் அவரை பீதியடையச் செய்கின்றன. ஜூன் 17 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, விஸ்வாஸ் தனது சகோதரரின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார், அதன்பிறகு அவர் அமைதியாகவே உள்ளார். விரைவாக குணமடைவதற்காக தற்போது ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.